
மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் சேர்த்தது. 216 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 19.4 ஓவர்களில் 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
கடைசி 4 ஓவர்களி்ல் கொல்கத்தா அணி வெற்றிக்கு 40 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், 17-வது ஓவரை சஹல் வீசியபோதுதான் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. ஒரே ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் உள்பட 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சஹல் கொல்கத்தா அணிக்கு அதிர்ச்சியளித்தார்.
அதிலும், செட்டில் ஆன பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யரை 85 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்ததுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின் கடைசி ஓவரில் 11 ரன்கள் எடுக்க வேண்டியதிருந்தது. மெக்காய் கடைசி ஓவரை வீசி உமேஷ் யாதவ், ஜாக்ஸனை வீழ்த்தி வெற்றி தேடித்தந்தார்.