
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. சிறிய பவுண்டரி எல்லைகளை கொண்ட மைதானம் என்பதால் எப்படியும் ஆஸ்திரேலியா 300 ரன்களை தாண்டும் என பலரும் எதிர்பார்த்தனர். அதே போலவே, ஆஸ்திரேலியா அணி அதிரடி ஆட்டம் விளையாடியது.
குறிப்பாக தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் இருவரும் சதம் அடித்து பாகிஸ்தான் அணியை சிதறவிட்டனர். ஆனால், இவ்வளவுக்கு நடுவிலும் தன் திறமையை காட்டினார் ஷஹீன் ஷா அப்ரிடி. இந்தப் போட்டியில், மிட்செல் மார்ஷ், மேக்ஸ்வெல் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தினார். அதன் பின் மார்கஸ் ஸ்டோய்னிஸ் விக்கெட்டை சாய்த்தார். கடைசி ஓவரில் மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹசில்வுட் விக்கெட்டை அடுத்தடுத்த பந்துகளில் சாய்த்தார்.
இந்த உலகக்கோப்பை தொடரில் முதல்முறையாக 5 விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஷஹீன் ஷா அஃப்ரிடி பெற்றுள்ளார். மேலும் உலகக்கோப்பை தொடர்களில் இதுவரை இரண்டு முறை ஒரே போட்டியில் 5 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்.