
கோலாகலமாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை தொடரில் நாளை அஹ்மதாபாத் நகரில் நடைபெறும் முக்கியமான லீக் போட்டியில் ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோத உள்ளது. அந்த போட்டியில் இந்தியாவை எப்படியாவது உலகக்கோப்பையில் முதல் முறையாக தோற்கடித்து வரலாற்றை மாற்ற வேண்டும் என்ற முனைப்புடன் பாகிஸ்தான் அணியினர் களமிறங்குகின்றனர்.
ஏனெனில் 1992 முதல் இதுவரை ஒருநாள் உலகக் கோப்பைகளில் இந்தியாவை சந்தித்த 7 போட்டிகளிலும் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்துள்ளது. எனவே அந்த சரித்திர தோல்விகளுக்கு இந்தியாவை இம்முறை அவருடைய சொந்த மண்ணில் வீழ்த்தி பழிக்கு பழி தீர்க்க வேண்டும் என்பதே பாகிஸ்தான் அணி மற்றும் ரசிகர்களின் எண்ணமாகவும் விருப்பமாகவும் இருக்கிறது.
மறுபுறம் வலுவான ஆஸ்திரேலியாவை தோற்கடித்து, ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றுள்ள இந்தியா தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாகவும் சொந்த மண்ணில் வலுவான அணியாகவும் திகழ்கிறது. மேலும் சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற 2023 ஆசிய கோப்பையில் பாகிஸ்தானை அடித்த நொறுக்கிய இந்தியா 228 ரன்கள் வித்தியாசத்தில் வரலாறு காணாத வெற்றி பெற்றது.