ஹாரிஸ் ராவுஃப் மீதான தடை குறித்து பிசிபி யிடம் கேள்வி எழுப்பிய ஷாஹீன் அஃப்ரிடி!
ஹாரிஸ் ராவுஃபின் ஒப்பந்தம் மற்றும் அவர் வெளிநாட்டு லீக் தொடர்களில் விளையாட தடை விதித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முடிவுகள் குறித்து அந்த அணியின் கேப்டன் ஷாஹீன் அஃப்ரிடி கேள்வி எழுப்பியுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிவேகப்பந்து வீச்சாளராக அறியபடுபவர் ஹாரிஸ் ராவுஃப். இவர் இதுவரை பாகிஸ்தான் அணிக்காக ஒரு டெஸ்ட், 37 ஒருநாள் மற்றும் 66 டி20 போட்டிகளில் 150 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மணிக்கு 150+ வேகத்தில் பந்துவீசும் திறன் கொண்ட இவர், எதிரணி பேட்டர்களை அச்சுறுத்தும் வகையில் பந்துவீசியதுடன், பாகிஸ்தான் அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளராகவும் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் ஹாரிஸ் ராவுஃப் பங்கேற்காமல் தொடரிலிருந்து விலகினார். அதேசமயம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த பிக்பேஷ் லீக் டி20 தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக ஹாரிஸ் ராவுஃப் விளையாடினார். இதனால் பாகிஸ்தான் அணி அனுபமில்லாத வேகப்பந்து வீச்சாளர்களுடன் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பங்கேற்றதுடன், அத்தொடரில் 3-0 என்ற கணக்கில் படுதோல்வியையும் சந்திதது.
Trending
இதன் காரணமாக, கடந்த டிசம்பர் 01, 2023ஆம் ஆண்டு முதல் ஹாரிஸ் ராவுஃபின் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாகவும், கூடுதலாக வரும் ஜூன் 30, 2024ஆம் தேதி வரை எந்தவொரு வெளிநாட்டு லீக் தொடர்களிலும் விளையாடுவதற்கான தடையில்லா சன்றிதழ் (NOC) அவருக்கு வழங்கப்பட மாட்டாது எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடியான முடிவை அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து பேசிய பாகிஸ்தான் டி20 அணி கேப்டன் ஷாஹின் அஃப்ரிடி, “பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவைப் பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை, ஆனால் அவருக்கான இந்த தடை நேரம் கேள்விக்குள்ளாக்க வேண்டும். ஏனெனில் எங்களுக்கு பிஎஸ்எல் தொடர் உள்ளது, ஆனால் அவருக்கான தடை மீதான தீர்ப்பு சமீபத்தில் தான் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹரிஸ் ராவுஃப் ஒரு வலிமையான வீரர், அதனால் பிசிபியின் தடை அவரை பெரிதளவில் பாதிக்காது என நினைக்கிறேன். இந்த நேரத்தில் முடிவை வெளியே கொண்டு வருவது சரியல்ல என்பதை பிசிபி கூட புரிந்து கொள்ளும். ஹரிஸ் சிறப்பாக செயல்படுகிறார், அவர் எப்போதும் பாகிஸ்தானுக்காக விளையாட தயாராக இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஷாஹின் அஃப்ரிடி தலிமையிலான லகூர் கலந்தர் அணியில் ஹாரிஸ் ராவுஃப் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now