
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நாளை ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. விரைவில் நடைபெறும் 2023 உலகக் கோப்பைக்கு முன்னோட்டமாக நடைபெறும் இத்தொடரில் வெல்லப்போவது யார் என்று எதிர்பார்ப்பு இரு நாட்டு ரசிகர்களிடமும் காணப்படுகிறது. இந்த போட்டியில் பாகிஸ்தானைச் சேர்ந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சாஹின் அஃப்ரிடி இந்தியா பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய சவாலை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் பொதுவாகவே வலது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக புதிய பந்தை ஸ்விங் செய்து இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் பெரிய சவாலை கொடுப்பார்கள். மறுபுறம் 2017 சாம்பியன்ஸ் கோப்பை ஃபைனல் முதல் 2019 உலகக்கோப்பை அரையிறுதி வரை முக்கியமான போட்டிகளில் இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ரோஹித் சர்மா, ராகுல் போன்ற இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பலாக செயல்பட்டுள்ளார்கள். சொல்லப்போனால் 2021 டி20 உலகக் கோப்பையில் ரோஹித், ராகுல் ஆகியோரை பவர் பிளே ஓவர்களில் ஒற்றை இலக்க ரன்களில் காலி செய்த ஷாஹின் அஃப்ரிடி, இந்தியாவை முதல் முறையாக பாகிஸ்தான் தோற்கடிப்பதற்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்றார்.
அந்த நிலையில் தற்போதைய அணியில் ரோஹித், கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் என டாப் 4 பேட்ஸ்மேன்களும் வலது கை வீரர்களாக இருக்கின்றனர். எனவே முதல் 10 ஓவர்களில் இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு ஷாஹீன் அஃப்ரிடி புதிய பந்தை ஸ்விங் செய்து மிகப்பெரிய சவாலை கொடுப்பார் என்று சந்தேகமின்றி நம்பலாம். அதன் காரணமாக பவர் பிளே ஓவர்களில் அவருக்கு எதிராக தாக்குப் பிடித்தால் மட்டுமே இந்தியா வெல்ல முடியும் என்ற நிலைமை இருக்கிறது என்றே சொல்லலாம்.