
இந்த முறை இந்தியாவில் முழுமையாக நடக்க இருக்கின்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான அட்டவணை கடந்த வாரத்தில் வெளியிடப்பட்டது. இந்திய அணி தனது மூன்றாவது ஆட்டத்தில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் பாகிஸ்தான் அணியைச் சந்திக்கிறது. இன்னும் மூன்று மாத காலம் இந்த தொடருக்கு இருக்கையில், தற்பொழுதே இந்தத் தொடரில் இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டி குறித்து பேச்சு வார்த்தைகள், முன்னாள் வீரர்கள் மற்றும் இந்நாள் வீரர்களிடம் ஆரம்பித்துவிட்டது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி, இந்தியா பாகிஸ்தான் போட்டி தரமானதாக இருக்காது, இந்தியா ஏற்கனவே மோதிய உலகக் கோப்பை மொட்டிகளில் ஒரு தலைபட்சமாக வெகு சுலபமாக பாகிஸ்தானை வீழ்த்தி இருக்கிறது, எனவே இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் போட்டி தான் மிகவும் தரமானதாக இருக்கும் என்று பேசி இருந்தார்.
இந்த நிலையில் கங்குலியின் இந்தக் கருத்துக்குப் பதில் அளித்து பேசிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் பஷீத் அலி, இந்தியா ஆஸ்திரேலியா மோதும் போட்டிக்கு இந்தியாவின் சாலைகள் காலியாக இருக்குமா? என்று கேள்வி எழுப்பி, கங்குலி எங்களோடு மைன்ட் கேம் விளையாடுகிறார் என்று கூறியிருக்கிறார். மிகச் சாதாரணமான ஒரு தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதினாலே, அது உலக கிரிக்கெட்டில் மிக முக்கியமான போட்டியாக அமையும். அந்தப் போட்டி உலகத்தின் எந்த மைதானத்தில் நடந்தாலும் ரசிகர்களால் நிரம்பும். பெரிய அளவில் பணம் புழங்கும்.