
கடந்த 2019ஆம் ஆண்டிற்கு பிறகு ஆசியக் கோப்பை தொடர், வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இத்தொடருக்கான அணிகளை இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் அறிவித்துவிட்டன.
சமீப காலத்தில் நடந்த போட்டிகளில் இந்திய, பாகிஸ்தான் அணிகள் சிறப்பாக விளையாடி நல்ல ஃபார்மில் உள்ளன. கடந்த 2021 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி இந்திய அணியை வீழ்த்தியது. இந்நிலையில், நடக்கவிருக்கும் ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று பாகிஸ்தான் அணிக்குப் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை ஷாஹீன் அஃப்ரிடிதான் முக்கிய பந்துவீச்சாளராக இருக்கிறார். இடது கையில் இன் ஸ்விங் பந்துகளை அபாரமாக வீசக் கூடியவர். இந்திய டாப் ஆர்டர் பேட்டர்கள் கே.எல்.ராகுல், ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகியோர் இடது கை இன் ஸ்விங் பந்துகளுக்கு எதிராக படுமோசமாக திணறக் கூடியவர்கள். கடந்த டி20 உலகக் கோப்பையின்போது அஃப்ரிடி பந்துவீச்சில்தான் இந்திய டாப் ஆர்டர் காலி ஆனது.