
IND vs PAK, Asia Cup Match: பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை லீக் போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தினம் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடைபெற்றது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் அலி ஆகா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து, இந்திய அணி பந்துவீச அழைத்தார். மேலும் இன்றைய போட்டிக்கான இரு அணியின் பிளேயிங் லெவனிலும் எந்தவொரு மாற்றமும் செய்யபடவில்லை.
இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் தொடக்க வீரர் சைம் அயுப் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய் முகமது ஹாரிஸும் ரன்களுக்கு நடையைக் கட்ட, பின்னர் இணைந்த பர்ஹான் - ஃபகர் ஸமான் இணை அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபகர் ஸமான் 17 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேப்டன் சல்மான் ஆகா, ஹசன் நவாஸ், முகமது நவாஸ் உள்ளிட்டோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.