
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று ஆண்டிகுவாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ் இண்டீஸ் அணியானது கேப்டன் ஷாய் ஹோப்பின் சதத்தின் மூலமும், கேசி கார்டி, ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் ஆகியோரது அரைசதங்களின் காரணமாக 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 328 ரன்களை குவித்தது.
இதில் அதிகபட்சமாக் கேப்டன் ஷாய் ஹோப் 117 ரன்களையும், கேசி கார்டி 71 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து தரப்பில் ஜான் டர்னர், அடில் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து 329 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய இங்கிலாந்து அணியானது லியாம் லிவிங்ஸ்டோனின் அதிரடியான சதத்தின் மூலம் 47.3 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 329 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.