
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி நேற்று பார்போடாஸில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதேசமயம் சஞ்சு சாம்சன், அக்ஸர் படேல் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு இஷான் கிஷன் - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியதுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர். அதன்பின் 34 ரன்கள் எடுத்திருந்த ஷுப்மன் கில் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்த இஷான் கிஷானும் 55 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.