WI vs ENG, 1st ODI: ஷாய் ஹோப் அசத்தல் சதம்; இங்கிலாந்தை வீழ்த்தியது விண்டீஸ்!
இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. ஆண்டிகுவாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அந்த அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிலிப் சால்ட் - வில் ஜேக்ஸ் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். இதில் ஜேக்ஸ் 26 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பிலிப் சால்ட் 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 45 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அடுத்து வந்த பென் டக்கெட்டும் 20 ரன்களில் நடையைக் கட்டினார்.
Trending
இதையடுத்து இணைந்த ஸாக் கிரௌலி - ஹாரி ப்ரூக் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். பின் ஸாக் கிரௌலி 48 ரன்களில் ரன் அவுட்டாக, அடுத்து வந்த கேப்டன் ஜோஸ் பட்லர் 3 ரன்களுக்கும், லியாம் லிவிங்ஸ்டோன் 17 ரன்களிலும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதேசமயம் மறுப்பக்கம் அரைசதம் கடந்து விளையாடிய ஹாரி ப்ரூக் 7 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 71 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த சாம் கரண் - பிரைடன் கார்ஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சாம் கரண் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 38 ரன்கள் எடுக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பிரைடன் கார்ஸ் 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 31 ரன்களை எடுத்து களத்தில் இருந்தார். இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 325 ரன்களைச் சேர்த்தது. விண்டீஸ் தரப்பில் ரொமாரியோ செப்பெர்ட், குடகேஷ் மோட்டி, ஒஷேன் தாமஸ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய அலிக் அதானஸ் - பிராண்டன் கிங் இணை தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் அதானஸ் அரைசதம் கடந்த நிலையில் 9 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 66 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பிராண்டன் கிங் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதன்பின் களமிறங்கிய கேசி கார்டி 16 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஷாய் ஹோப் - ஷிம்ரான் ஹெட்மையர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். பின் 32 ரன்களுக்கு ஷிம்ரான் ஹெட்மையர் விக்கெட்டை இழக்க, ரூதர்ஃபோர்ட் 6 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரோமாரியோ செப்பெர்ட் அதிரடியாக விளையாடி 28 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 49 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, மறுபக்கம் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஷாய் ஹோப் சதமடித்ததுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 4 பவுண்டரி, 7 சிக்சர்கள் என 109 ரன்களை விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 48.5 இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. மேலும் இப்போட்டியில் சதமடித்து அசத்திய ஷாய் ஹோப் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
Win Big, Make Your Cricket Tales Now