
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தென் ஆப்பிரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியானது முடிவு எட்டப்படாமல் டிராவில் முடிந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது இன்று (ஆகஸ்ட் 15) கயானாவில் உள்ள புராவிடன்ஸ் மைதானத்தில் தொடங்கியது.இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.
இப்போட்டிகான தென் ஆப்பிரிக்க அணியின் நந்த்ரே பர்கர், டேன் பீட் ஆகியோரும், வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமார் ஜோசபும் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஐடன் மார்க்ரம் மற்றும் டோனி டி ஸோர்ஸி ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டோனி டி ஸோர்ஸி ஒரு ரன்னில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ஐடன் மார்க்ரம் 14 ரன்களில் ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றத்தைக் கொடுத்தார்.
அதன்பின் களமிறங்கிய கேப்டன் டெம்பா பவுமா ரன்கள் ஏதுமின்றியும், அடுத்து களமிறங்கிய டேவிட் பெட்டிங்ஹம் 28 ரன்களிலும், வியான் முல்டர், கேசவ் மஹாராஜ் ஆகியோர் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் தென் ஆப்பிரிக்க அணியானது 88 ரன்களுக்குள்ளேயே 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமார் ஜோசப் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.