நியூசிலாந்து அணி குறித்து ட்விட்டரில் விமர்சித்த வார்னேவுக்கு அட்வைஸ் வழங்கிய ரசிகர்!
இந்தியா முதல் இன்னிங்ஸில் 275 முதல் 300 ரன்கள் எடுத்தாலே நியூசிலாந்துக்கு சிக்கல் வரும் என்று ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே கருத்து தெரிவித்துள்ளார்.
சவுதாம்டனில் நடைபெற்று வரும் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷில் இறுதிப் போட்டியில் முதல்நாள் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது. 2 ஆவது நாளில், டாஸ் வென்ற நியுசிலாந்து அணி இந்திய அணியை பேட் செய்ய அழைத்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோகித் ஷர்மா, சுப்மான் கில் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் எடுத்தனர்.
ரோகித் ஷர்மா 34 ரன்களிலும், சுப்மான் கில் 28 ரன்களிலும் அடுத்தடுத்த விக்கெட்டை இழந்தனர். புஜாரா 8 ரன்களில் பெவிலியன் திரும்பினர். அதன் பின் ஜோடி சேர்ந்த கேப்டன் கோலி, துணைக்கேப்டன் ரஹானே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர்.
Trending
இதற்கிடையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக இரண்டாம் நாள் ஆட்டம் தேநீர் இடைவேளையுடன் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. நாளின் இறுதியில் கேப்டன் விராட் கோலி 44 ரன்களுடனும், அஜிங்க்ய ரஹானே 29 ரன்களிலும் களத்தில் உள்ளனர். இதனால் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்களைச் சேர்த்துள்ளது.
இந்நிலையில், இப்போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 275 முதல் 300 ரன்கள் எடுத்தாலே நியூசிலாந்துக்கு சிக்கல் வரும் என்று ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் "நியூசிலாந்து அணி ஒரு ஸ்பின்னர் கூட இல்லாமல் களமிறங்கியிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. சவுத்தாம்டன் களத்தில் மிகப்பெரிய அளவில் பந்து ஸ்பின் ஆக போகிறது. அதற்கான அறிகுறிகள் தற்போதே தெரிய தொடங்கியுள்ளது. மழை மட்டும் குறுக்கிடாமல் இருந்தால் தற்போது முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி 275 ரன்கள் முதல் 300 ரன்கள் அடித்தால் போதும். போட்டி அவர்களின் பக்கம் சென்றுவிடும்" என பதிவிட்டு இருக்கிறார்.
இதற்கு பதிலளித்த ரசிகர்கள் ஒருவர் "சுழற்பந்து குறித்து கொஞ்சமாவது தெரிந்துக்கொள்ளுங்கள்" என பதிவிட்டுள்ளார். உலகின் தலைச்சிறந்த சுழற்பந்துவீச்சாளராக கருதப்படும் ஷேன் வார்னேவுக்கு இப்படியொரு பதிலை கொடுத்த ரசிகரை, ட்விட்டரில் பலரும் கலாய்த்து வருகின்றனர்.
இந்திய அணி இந்தப் போட்டியில் அஸ்வின், ஜடேஜா என இரு சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியுள்ளது. நியூசிலாந்து அணியில் சுழற்பந்துவீச்சாளருக்கு இடமில்லை என்பதால் ஷேன் வார்னே இத்தகைய விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now