இந்த போட்டியில் வெல்பவர்களே ஆசியக் கோப்பையையும் வெல்வார்கள் - ஷேன் வாட்சன்!
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறும் ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அதுதான் ஆசியக் கோப்பை டி20 போட்டியை வெல்லும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கூறியுள்ளார்.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில், ஆசியக் கோப்பைப் போட்டியை 1984 முதல் நடத்தி வருகிறது. 50 ஓவர், டி20 என இரு வகைகளிலும் இப்போட்டி நடைபெறும். இந்திய அணி ஆசியக் கோப்பை ஏழு முறை வென்றுள்ளது. 2022 ஆசியக் கோப்பைப் போட்டி இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக இலங்கைக்குப் பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை டி20 போட்டி நடைபெறுகிறது. ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறவுள்ள போட்டியில் ஆகஸ்ட் 28 அன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
Trending
ஆசியக் கோப்பை டி20 போட்டி பற்றி ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கூறுகையில், “முதல் ஆட்டம் மிகவும் முக்கியமானது. இந்தியாவை வீழ்த்தி விட முடியும் என்கிற முழு நம்பிக்கையில் உள்ளார்கள் பாகிஸ்தான் வீரர்கள். எனவே இந்தியா - பாகிஸ்தான் இடையிலான முதல் ஆட்டத்தை வெல்பவர்கள் ஆசியக் கோப்பையையும் வெல்வார்கள்.
ஆசியக் கோப்பைப் போட்டியை இந்தியா வெல்லும் என நான் நம்புகிறேன். அதிரடியான வீரர்கள் பலர் இந்திய அணியில் உள்ளார்கள். அவர்களைக் கட்டுப்படுத்துவது கடினம். எந்தச் சூழலிலும் அவர்களால் நன்கு விளையாட முடியும். எனவே இந்தியாவே ஆசியக் கோப்பையை வெல்லும்.
நீண்ட நாள் கழித்து இந்தியாவுக்கு எதிரான உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் ஜெயித்ததால் இம்முறை முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் வெல்லவும் வாய்ப்புள்ளது. இந்த விஷயத்தில் நான் மதில் மேல் பூனையாக உள்ளேன். தன்னம்பிக்கையுடன் பாகிஸ்தான் விளையாடும்போது அவர்களைத் தடுத்து நிறுத்த முடியாது. பெரிய போட்டிகளில் இந்தியாவை வீழ்த்த முடியும் என நம்புகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now