ஐபிஎல் தொடரில் மோசமான சாதனையை படைத்த ஷர்தூல் தாக்கூர்!
கேகேஆருக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ஷர்தூல் தாக்கூர் மோசமான சாதனையைப் படைத்துள்ளார்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய லக்னோ அணியில் ஐடன் மாக்ரம் 47 ரன்களையும், மிட்செல் மார்ஷ் 81 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழக்க, நிக்கோலஸ் பூரன் 21 பந்துகளில் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 87 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 238 ரன்களைக் குவித்தது.
Trending
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய கேகேஆர் அணியில் கேப்டன் அஜிங்கியா ரஹானே 61 ரன்களையும், வெங்கடேஷ் ஐயர் 45 ரன்களையும், இறுதிவரை போராடிய ரிங்கு சிங் 38 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 234 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ஷர்தூல் தாக்கூர் மோசமான சாதனையைப் படைத்துள்ளார். அதன்படி இந்த ஆட்டத்தில் கொல்கத்தா பேட்டிங் செய்து கொண்டிருந்த போது இன்னிங்ஸின் 13ஆவது ஓவரை ஷர்துல் தாக்கூர் வீசினார். அந்த ஓவரில் அவர் முதல் பந்தில் தொடர்ச்சியாக 5 வைடுகளை வீசியதுடன் மொத்தமாக அந்த ஓவரில் 20 ரன்களை வழங்கி இருந்தார்.
இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 5 வைட் பந்துகளை வீசிய முதல் வீரர் எனும் மோசமான சாதனையை ஷர்தூல் தாக்கூர் படைத்துள்ளார். இதற்கு முன்பு, ஜஸ்பிரித் பும்ரா (2015), பிரவீன் குமார் (2017), முகமது சிராஜ் (2023), கலீல் அகமது (2024) ஆகியோர் ஒரு ஐபிஎல் ஓவரில் தொடர்ச்சியாக நான்கு வைட் பந்துகளை வீசியதே இதுநாள் வரை சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர்த்து இந்த ஓவரில் ஷர்துல் மொத்தம் 11 பந்துகளை வீசினார். ஐபிஎல் வரலாற்றில் அதிக நேரம் வீசப்பட்ட ஓவர் இதுவாகும். முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய துஷார் தேஷ்பாண்டே, 2023ஆம் ஆண்டில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக ஒரு ஓவரில் 11 பந்துகளை வீசினார், அதே நேரத்தில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய முகமது சிராஜ், 2023ஆம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஒரு ஓவரில் 11 பந்துகளை வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
இதுதவிர்த்து இந்த போட்டியில் ஷர்தூல் தாக்கூர் மொத்தமாக 8 வைட்களை வீசி இருந்தார். இதன் மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிக வைடு வீசிய பந்துவீச்சாளர் எனும் மோசமான சாதனையையும் ஷர்தூல் தாக்கூர் படைத்துள்ளார். மேற்கொண்டு கேகேஆருக்கு எதிரான இந்தப் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மொத்தமாக 15 வைடுகள் வீசியதன் மூலம், ஒரு ஐபிஎல் இன்னிங்ஸில் அதிக வைட்களை வீசிய அணி எனும் சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now