
மும்பையில் உள்ள ஷரத் பவார் கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் நடைபெற்று வரும் 2024-25 ரஞ்சி கோப்பை போட்டியில் மும்பை மற்றும் மேகாலயா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய மேகாலயா அணி மும்பை அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இந்நிலையில் இப்போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மும்பை அணி வேகப்பந்து வீச்சாளர் ஷர்தூல் தாக்கூர் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவர் இந்த இன்னிங்ஸில் தனது இரண்டாவது ஓவரில் மேகாலயா அணி வீரர்கள் அனிருத், சுமித் குமார் மற்றும் ஜஸ்கிரத் சிங் ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் இந்த ஹாட்ரிக் விக்கெட்டுகளை பதிவுசெய்து அசத்தியுள்ளார்.
இதன்மூலம் 2024–25 ரஞ்சி கோப்பை தொடரில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது வீரர் எனும் பெருமையையும் ஷர்துல் தாக்கூர் பெற்றுள்ளார். முன்னதாக இந்த சீசனில் புதுச்சேரிக்கு எதிராக இமாச்சலப் பிரதேச அணி வீரர் ரிஷி தவான் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதுதவிர்த்து ரஞ்சி கோப்பை தொடர் வரலாற்றில் மும்பை அணிக்காக ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றிய 5ஆவது பந்துவீச்சாளர் எனும் பெருமையும் ஷர்தூல் தாக்கூருக்கு கிடைத்துள்ளது.