
இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவிற்கு பிறகு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக பார்க்கப்பட்டவர் ஷர்துல் தாக்கூர். இந்திய டெஸ்ட் அணியில் தவிர்க்க முடியாத வீரராக இருந்த ஷர்தூல் காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன்பின் அவரால் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் தான் சமீபத்தில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக விளையாடிய ஷர்தூல் தாக்கூர், பந்துவீச்சில் மட்டுமல்லாது பேட்டிங்கிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி இருந்தார். அதிலும் குறிப்பாக அவ்ர் 9 போட்டிகளில் விளையாடி பேட்டிங்கில் 505 ரன்களையும், பந்துவீச்சில் 35 விக்கெட்டுகளையும் கைப்பற்றி தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவர் இடம்பிடிப்பார் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
அதேசமயம் நடந்து முடிந்த ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலத்தில் ஷர்தூல் தாக்கூரை எந்த அணியும் ஒப்பந்த செய்யவில்லை. ஐபிஎல் தொடரில் இதுவரை 95 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் பேட்டிங்கில் ஒரு அரைசதம் உள்பட 307 ரன்களையும், பந்துவீச்சில் 94 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இருப்பினும் ஷர்தூல் தாக்கூரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்காதது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.