
மேஜர் லீக் கிரிக்கெட் டி20 தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 18ஆவது லீக் ஆட்டத்தில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சியாட்டில் ஆர்காஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சியாட்டில் ஆர்காஸ் அணியில் குயின்டன் டி காக், ஜெயசூர்யா ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் பேட்டிங்கில் பெரிதளவில் சோபிக்கவில்லை.
இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் அதிகபட்சமாக குயின்டன் டி காக் 8 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 62 ரன்களையும், ஜெயசூர்யா 31 ரன்களையும் சேர்த்தனர். யூனிகார்ன்ஸ் அணி தரப்பில் ஹசன் கான் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய யூனிகார்ன்ஸ் அணிக்கு ஃபின் ஆலன் அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தார்.
இப்போட்டியில் ஃபின் ஆலன் அரைசதம் கடந்ததுடன் 30 பந்துகளில் 8 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 77 ரன்களைக் குவித்து அசத்த, சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணியானது 14.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் சியாட்டில் ஆர்காஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தினார். இப்போட்டியில் அதிரடியாக விளையடி அணியின் வெற்றிக்கு உதவிய ஃபின் ஆலன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.