
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் எலைட் குரூப் பி பிரிவுக்கான ஆட்டம் ஒன்றி மும்பை மற்றும் அசாம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பையில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அசாம் அணி வீரர்கள் ஷர்துல் தாக்கூரின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
அந்த அணியில் அதிகபட்சமாக அபிஷேக் தாக்கூரி 31 ரன்களைச் சேர்த்ததை தவிற மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். அதிலும் குறிப்பாக அந்த அணியின் 7 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களுக்கு நடையைக் கட்டினர். இதனால் அந்த அணி 32.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துடன், வெறும் 84 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. மும்பை அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஷர்துல் தாக்கூர் 10.1 ஓவர்களை வீசியதுடன் 21 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதனைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய மும்பை அணியில் லல்வானி ரன்கள் ஏதுமின்றியும், பிரித்வி ஷா 30 ரன்களிலும், ஹர்திக் தோமர் 22 ரன்களிலும், சூர்யான்ஷ் ரன்கள் ஏதுமின்றியும், அஜிங்கியா ரஹானே 22 ரன்களுக்கும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் களமிறங்கிய ஷிவம் தூபே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.