
ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை வெல்ல உலகின் அனைத்து அணிகளும் இறுதிகட்டமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில் 2009க்கு பின் 2ஆவது கோப்பையை வெல்ல நம்பிக்கை நட்சத்திரம் பாபர் அசாம் தலைமையில் தயாராகி வரும் பாகிஸ்தான் அத்தொடருக்கு முன்பாக சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக பங்கேற்ற 7 போட்டிகள் கொண்ட மெகா டி20 தொடரில் 4 – 3 என்ற கணக்கில் மண்ணைக் கவ்வி பின்னடைவை சந்தித்துள்ளது.
குறிப்பாக வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டியில் இங்கிலாந்து நிர்ணயித்த 210 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் திணறிய பாகிஸ்தான் 67 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இத்தனைக்கும் உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனாக திகழும் முஹம்மது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் இருந்தும் இப்படி தோற்றது அந்த அணி ரசிகர்கள் கடுப்பாக வைத்துள்ளது. சமீப காலங்களாகவே பாகிஸ்தான் பேட்டிங் வரிசையில் அந்த 2 உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களை தவிர்த்து தரமான பேட்ஸ்மேன்கள் இல்லாமல் இருப்பதால் மிடில் ஆர்டர் பலவீனமாக உள்ளது.
இருப்பினும் பெரும்பாலான போட்டிகளில் அந்த இருவரும் சிறப்பாக செயல்பட்டு அதை மறைத்தாலும் அனைத்துப் போட்டிகளிலும அவர்களால் காப்பாற்ற முடியாது என்ற சூழ்நிலையில் அவர்கள் தடுமாறும் போது பாகிஸ்தான் இப்படி தோற்று விடுகிறது. அதனாலேயே சமீபத்திய ஆசிய கோப்பையில் இலங்கையிடம் ஃபைனலில் தோல்வியை சந்தித்த போதிலும் இன்னும் அந்த பிரச்சனையை பாகிஸ்தான் அணி நிர்வாகம் சரி செய்யாமல் இருந்து வருவது அந்நாட்டு ரசிகர்களையும் முன்னாள் வீரர்களையும் அதிருப்தியடைய வைத்துள்ளது.