
இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்ஸா மற்றும் பாகிஸ்தான் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக் ஆகிய இருவரும் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்தியா - பாகிஸ்தான் நாடுகளின் அடையாளங்களில் ஒருவராக திகழ்ந்த விளையாட்டு வீரரும் வீராங்கனையும் திருமணம் செய்துகொண்டது பெரும் பரபரப்பாக இருந்தது. கடந்த 2018ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், அண்மையில் சானியா மிர்ஸாவின் இன்ஸ்டாகிராம் பதிவு, சானியா - ஷோயப் மாலிக் ஜோடியின் பிரிவை உணர்த்தும் சமிக்ஞையாக இருந்தது. “உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன? அல்லாவைக் காண” என்று பதிவிட்டிருந்தார். ஷோயப் மாலிக்கை பிரிந்திருக்கும் சானியா மிர்சாவின் இந்த பதிவு விவாகரத்து சர்ச்சையை எழுப்பியது.
சானியா மிர்ஸா - ஷோயப் மாலிக் தம்பதி அதிகாரப்பூர்வமாக விவாகரத்து செய்து பிரிந்துவிட்டதாகவும், அவர்களது மகனுக்கு பெற்றோராக இருப்பார்கள் என்றும் பாகிஸ்தான் ஊடகம் தெரிவித்திருந்தது. ஷோயப் மாலிக் பாகிஸ்தானின் பிரபல நடிகையுடன் திருமணத்தை தாண்டிய உறவில் இருப்பதை சானியா மிர்சா கண்டுபிடித்துவிட்டதாகவும், அதனால் தான் பிரிந்துவிட்டதாகவும் தகவல் வெளியானது.