
இந்திய அணி நிர்வாகம் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பைக்கான வேலைகளில் இருந்தபோது, வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை ஷிகர் தவான் வழி நடத்தினார். அந்தத் தொடரில் ஷுப்மன் கில் ஒருநாள் கிரிக்கெட் இந்திய அணிக்குள் வந்தார்.
அதற்கடுத்து உடனே ஜிம்பாப்வே ஒருநாள் கிரிக்கெட் தொடர் இருந்ததும், தவான் இடமிருந்த தற்காலிக கேப்டன் பொறுப்பை உடனே காயத்தில் இருந்து திரும்பி வந்த கேஎல்ராகுல் இடம் ஒப்படைத்தார்கள். இந்திய அணி டி20 உலக கோப்பைக்கு சென்று ஆஸ்திரேலியாவில் தோல்வியடைந்து திரும்பியது. இதற்கு அடுத்து நியூசிலாந்து சென்ற இந்திய அணிக்கு மீண்டும் ஷிகர் தவான் கேப்டன் நியமிக்கப்பட்டார். அந்தத் தொடரில் அவரது பேட்டிங் கொஞ்சம் சுமாராகத்தான் இருந்தது.
அடுத்து இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு தயாராகியது. இந்த தயாரிப்பில் ஷுப்மன் கில்லை வைத்துக் கொண்டு ஷிகர் தவானை அதிரடியாக கழட்டி விட்டது இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம். நடந்த மொத்தத்திற்கும் ஒருநாள் கூட ஷிகர் தவான் தரப்பில் இருந்து அதிருப்தி வந்தது கிடையாது.