ஐபிஎல் 2022: வெங்கடேஷ் ஐயரின் பேட்டிங் ஆர்டரை மாற்றியது குறித்து மெக்கல்லம் விளக்கம்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெங்கடேஷ் ஐயரின் பேட்டிங் ஆர்டரை மாற்றியமைத்தற்கான காரணத்தை கொல்கத்தா அணியின் பயிற்சியாளரான மெக்கல்லம் வெளியிட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 30ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
Trending
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 103 ரன்களும், சஞ்சு சாம்சன் 38 ரன்களும் எடுத்தனர்.
இதன்பின் 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆரோன் பின்ச் 58 ரன்களும், ஸ்ரேயஸ் ஐயர் 85 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், சாஹல் வீசிய போட்டியின் 17ஆவது ஓவரில் ஸ்ரேயஸ் ஐயர் உள்பட மொத்தம் நான்கு வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்ததால் போட்டியில் பெரும் திருப்புமுனை ஏற்பட்டது.
18ஆவது ஓவரில் உமேஷ் யாதவ் 18 ரன்கள் எடுத்தாலும், கடைசி இரண்டு ஓவரை வீசிய பிரசீத் கிருஷ்ணா மற்றும் ஓபட் மெக்காய் ஆகியோர் சிறப்பாக பந்துவீசியதால் 19.4 ஓவரில் 210 ரன்கள் மட்டுமே எடுத்த கொல்கத்தா அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டது.
கொல்கத்தா அணியின் துவக்க வீரரான வெங்கடேஷ் ஐயரை இந்த போட்டியில் 7ஆவது இடத்தில் களமிறக்கியதும் கொல்கத்தா அணியின் தோல்விக்கான காரணமாக பார்க்கப்படும் நிலையில், வெங்கடேஷ் ஐயரின் பேட்டிங் ஆர்டரை மாற்றியதற்கான காரணத்தை கொல்கத்தா அணியின் பயிற்சியாளரான பிராண்டன் மெக்கல்லம் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து மெக்கல்லம் பேசுகையில், “ஆரோன் பின்ச்சும், சுனில் நரைனும் துவக்க வீரராக களமிறங்கினால் அது கூடுதல் பலத்தை கொடுக்கும் என நினைத்தோம். இந்த போட்டி பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததால் அதிகமான ரன்கள் குவிக்க முடியும் என்று முன்பே கணித்திருந்தோம். சுனில் நரைன் துவக்க வீரராக களமிறங்கி எப்படி விளையாடியுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால் துரதிஷ்டவசமாக ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவர் ஒரு ரன் எடுப்பதற்குள் விக்கெட்டை இழந்துவிட்டார். இது போன்று நடப்பது இயல்பான விசயம் தான். இந்த போட்டியில் வெங்கடேஷ் ஐயரை, ரவிச்சந்திர அஸ்வின் போன்ற சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மிடில் ஓவர்களில் களமிறக்க வேண்டும் என்பதே எங்கள் திட்டம்.
— Diving Slip (@SlipDiving) April 18, 2022
வெங்கடேஷ் ஐயர் சுழற்பந்து வீச்சை எளிதாக எதிர்கொள்ள கூடியவர் என்பதால் அதை இந்த போட்டியில் பயன்படுத்தி கொள்ள நினைத்தோம், இதற்காகவே அவரது பேட்டிங் ஆர்டரையும் மாற்றினோம்” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now