
12ஆவது சீசன் சிபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கயானாவில் உள்ள புரோவிடன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கயானா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பார்படாஸ் ராயல்ஸ் அணியனது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமறியது. அந்த அணியில் டேவிட் மில்லர் மற்றும் அலிக் அதானாஸ் ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்களில் யாரும் 20 ரன்களுக்கு மேல் சேர்க்கவில்லை. இதனால் 20 ஓவர்கள் முடிவில் பார்படாஸ் ராயல்ஸ் அணியானது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 148 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதில் அதிகபட்சமாக டேவிட் மில்லர் 36 ரன்களையும், அலிக் அதானாஸ் 26 ரன்களைச் சேர்த்தனர். கயானா அணி தரப்பில் ரொமாரியோ ஷெப்பர்ட் 3 விக்கெட்டுகளையும், மொயீன் அலி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய கயானா அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் மொயீன் அலி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்து கொடுத்தனர்.