
SL vs BAN, 1st ODI: வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை பேட்டர்கள் சோபிக்க தவறிய நிலையில் அணியின் கேப்டன் சரித் அசலங்கா சதமடித்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார்.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச அணியானது தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவிக்க, இலங்கை அணி தரப்பில் பதும் நிஷங்கா மற்றும் நிஷான் மதுஷ்கா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிஷங்கா ரன்கள் ஏதுமின்றியும், நிஷான் மதுஷ்கா 6 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கமிந்து மெண்டிஸும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த குசால் மெண்டிஸ் மற்றும் கேப்டன் சரித் அசலங்கா இணை விக்கெட் இழப்பை தடுத்ததுடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், குசால் மெண்டிஸ் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 45 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் களமிறங்கிய ஜனித் லியானகே 29 ரன்னிலும், மிலன் ரத்னயகே மற்றும் வநிந்து ஹசரங்கா ஆகியோர் தலா 22 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர்.