
SL vs BAN, 3rd T20I: இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்றதுடன் 2-1 என்ற கணக்கில் டி20 கிரிக்கெட் தொடரையும் வென்று அசத்தியுள்ளது.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளின் முடிவில் இரு அணியும் தலா 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்திருந்தன. இந்நிலையில் இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து வங்கதேச அணியை பந்துவீச அழைத்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கும் பதும் நிஷங்கா மற்றும் குசால் மெண்டிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பதும் நிஷங்கா ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுமுனையில் குசால் மெண்டிஸ் 6 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய குசால் பெரேரா ரன்கள் ஏதுமின்றியும், தினேஷ் சண்டிமால் 4 ரன்களுக்கும், கேப்டன் சரித் அசலங்கா 3 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். மேற்கொண்டு கமிந்து மெண்டிஸும் ஒரு பவுண்டரி, ஒரு சிஸர் என 21 ரன்களில் நடையைக் கட்டினார்.