
Sri Lanka vs Bangladesh 1st ODI: வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் மூலம் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் வநிந்து ஹசரங்கா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் விளையாடவுள்ளது. இதில் தற்சமயம் இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இலங்கை அணியானது 1-0 என்ற கணக்கில் வங்கதேச அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியுள்ளது. இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது.
அந்தவகையில் இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஜூலை 2ஆம் தேதி கொழும்புவில் உள்ள ஆர் பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே டெஸ்ட் தொடரை வென்றுள்ள இலங்கை அணி ஒருநாள் தொடரிலும் ஆதிக்கம் செலுத்தும் முனைப்பிலும், மறுபக்கம் டெஸ்ட் தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் வங்கதேசமும் விளையாடும் என்பதாலும் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.