
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் தலா 230 ரன்களைச் சேர்த்து போட்டியை டையில் முடிந்த நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது கொழும்புவில் இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்தார். இன்றைய போட்டிக்கான இலங்கை அணி மஹீஷ் தீக்ஷ்னாவும், இந்திய அணியில் ரிஷப் பந்த் மற்றும அறிமுக வீரர் ரியான் பராக்கும் பிளேயிங் லெவனில் இடம்பிடித்தனர். இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா மற்றும் அவிஷ்கா ஃபெர்னாண்டோ இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 89 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
அதன்பின் அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பதும் நிஷங்கா 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 45 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய குசால் மெண்டிஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவிஷ்கா ஃபெர்னாண்டோ அரைசதம் கடாந்துடன், அணியின் ஸ்கோரையும் மாளமளவென உயர்த்தினார். இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 80 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் அமைத்து அசத்தினர்.