
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது தற்சமயம் நடைபெற்று வருகிறது. இதில் நடந்த முடிந்த முதலிரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்றதுடன, 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (ஜூலை 30) நடைபெற்றது. மழை காரணமாக தாமதமாக தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் அதிரடியாக விளையாட முயற்சித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் ரன்கள் ஏதுமின்றியும், ரிங்கு சிங் ஒரு ரன்னுடனும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 8 ரன்களிலும், ஷிவம் தூபே 13 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இதனால் இந்திய அணி 48 ரன்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த ஷுப்மன் கில் - ரியான் பராக் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினர். தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் 6ஆவது விக்கெட்டிற்கு 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷுப்மன் கில் 37 பந்துகளில் 39 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ரியான் பராக்கும் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 26 ரன்களில் நடையைக் கட்டினார்.