
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் அயர்லாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலேவிலுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக நிஷான் மதுசங்கா - கேப்டன் திமுத் கருணரத்னே இணை களமிறங்கினர். இதில் 29 ரன்களை எடுத்திருந்த மதுசங்கா, கர்டிஸ் காம்பேர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் கருணரத்னேவுடன் இணைந்த குசால் மெண்டிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கருணரத்னே சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 15ஆவது சதத்தையும், குசால் மெண்டிஸ் தனது 8ஆவது சர்வதேச சதத்தையும் பதிவுசெய்து அசத்தினர். அதன்பின் 18 பவுண்டரி, ஒரு சிக்சர் என 140 ரன்களில் குசால் மெண்டிஸ் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.