SL vs NZ, 2nd ODI: மெண்டிஸ், தீக்ஷனா அசத்தல்; தொடரை வென்றது இலங்கை!
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
நியூசிலாந்து அணி தற்சமயம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணியானது டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 45 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வீழ்த்தி வெற்றிபெற்றதுடன, 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று பல்லகலே சர்வதெச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நியூசிலாந்தை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு வில் யங் - டிம் ராபின்சன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டிம் ராபின்சன் 4 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஹென்றி நிக்கோலஸும் 8 ரன்களுடன் நடையைக் கட்டினார்.
Trending
பின்னர் வில் யங்குடன் இணைந்த் மார்க் சாப்மேன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதேசமயம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில் யங் 26 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கிளென் பிலீப்ஸ் 15 ரன்களில் நடையைக் கட்டினார். இருப்பினும் மறுபக்கம் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மார்க் சாப்மேன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த மார்க் சாப்மேன் 7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 76 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய மிட்செல் ஹெய் ஒருபக்கம் பொறுப்பாக விளையாடி வந்த நிலையில், மறுமுனையில் களமிறங்கிய மைக்கேல் பிரேஸ்வெல் ரன்கள் ஏதுமின்றியும், மிட்செல் சான்ட்னர் 6 ரன்னிலும், நாதன் ஸ்மித் ரன்கள் ஏதுமின்றியும், இஷ் சோதி 9 ரன்னிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அதேசமயம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மிட்செல் ஹெயும் 49 ரன்னில் ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணி 209 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை தரப்பில் மஹீஷ் தீக்ஷனா மற்றும் ஜெஃப்ரி வண்டர்சே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - அவிஷ்கா ஃபெர்னாண்டோ இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அவிஷ்கா ஃபெர்னாண்டோ 5 ரன்னில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, அவரைத்தொடர்ந்து 28 ரன்களைச் சேர்த்த நிலையில் பதும் நிஷங்காவும் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய குசால் மெண்டிஸ் ஒருபக்கம் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய கமிந்து மெண்டிஸ் ரன்கள் ஏதுமின்றியும், சரித் அசலங்கா 13 ரன்களிலும், சதீரா 8 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
இருப்பினும் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த குசால் மெண்டிஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த நிலையில், மறுமுனையில் களமிறங்கிய் ஜனித் லியானகே 22 ரன்களையும், துனித் வெல்லாலகே 18 ரன்களையும் சேர்த்து தங்கள் பங்களிப்பை வழங்கினர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய மஹீஷ் தீக்ஷனாவும் தனது பங்கிற்கு சில பவுண்டரிகளை பறக்கவிட இலங்கை அணியின் வெற்றியும் உறுதியானது. இறுதியில் இலங்கை அணி 46 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது.
Also Read: Funding To Save Test Cricket
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த குசால் மெண்டிஸ் 6 பவுண்டரிகளுடன் 74 ரன்களையும், மஹீஷ் தீக்க்ஷனா 2 பவுண்டரி, ஒரு சிக்சர் என 25 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மைக்கேல் பிரேஸ்வெல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணியானது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் நியூசிலாந்துக்கு எதிராக 12 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் தொடரை இலங்கை அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now