
பாகிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் ஆடியது.
இலங்கை அணியில் தினேஷ் சண்டிமால் சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். தினேஷ் சண்டிமால் 76 ரன்கள் அடித்தார். தொடக்க வீரர் ஒஷாடா ஃபெர்னாண்டோ 35 ரன்களும், பின்வரிசையில் மஹீஷ் தீக்ஷனா 38 ரன்களும் அடித்தனர். இதையடுத்து முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 222 ரன்கள் அடித்தது. பாகிஸ்தான் அணி சார்பில் ஷாஹீன் அஃப்ரிடி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளும், ஹசன் அலி மற்றும் யாசிர் ஷா ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் ஒருமுனையில் நிலைத்து நிற்க, மறுமுனையில் மற்ற அனைத்து வீரர்களும் சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்று மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடிய பாபர் அசாம் சதமடித்தார். பாகிஸ்தான் அணியை சதமடித்து தனி ஒருவனாக கரைசேர்த்தார் பாபர் அசாம். 148 ரன்களுக்கே 9 விக்கெட்டுகளை இழந்துவிட்டது பாகிஸ்தான் அணி.