
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி தற்போது டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூலை 16ஆம் தேதி கலேவில் தொடங்கியது. இப்போட்ட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணிமுதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணி தனஞ்செய டி சில்வாவின் அபாரமான சதத்தின் மூலமாகவும், மேத்யூஸின் அரைசதம் மூலமாகவும் 312 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, அப்ரார் அஹ்மத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், சௌத் சகீல், ஆகா சல்மான் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் 461 ரன்களைச் சேர்த்தது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சௌத் சகீல் இரட்டை சதமடித்ததுடன் 208 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இலங்கை அணி தரப்பில் ரமேஷ் மெண்டிஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.