
வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகளை உள்ளடக்கிய ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரில் இலங்கை அணியானது 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதல் போட்டியிலும் இலங்கை அணி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. இந்த வெற்றியின் காரணமாக இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரிலும் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது இன்று பல்லகலேவில் உள்ள சர்வதேச் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டி தொடங்கும் முன்னரே மழை பெய்த காரணத்தால் ஆட்டம் தாமதமாக தொடங்கியது. அதன்பின் 44 ஓவர்களாக குறைக்கப்பட்ட இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராண்டன் கிங் - அலிக் அதனாஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் அலிக் அதனாஸ் ஒரு ரன்னில் நடையைக் கட்ட, மற்றொரு தொடக்க வீரரான பிராண்டன் கிங்கும் 16 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய கேசி கார்டி 6 ரன்னிலும், கேப்டன் ஷாய் ஹோப் 5 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, அடுத்து வந்த ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய ரோஸ்டன் சேஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், ஹெய்டன் வால்ஷ், அல்ஸாரி ஜோசப் என அனைவரும் வந்த வேகத்திலேயே பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.