
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஜிம்பாப்வே அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதலாவது போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்நிலையில் இத்தொடரின் கடைசி ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி பேட்டிங் செய்துகொண்டிருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது. அதன்பின் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இப்போட்டி 27 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து இன்னிங்ஸைத் தொடர்ந்த ஜிம்பாப்வே அணியில் கைடானோ 17 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான கும்பியும் 29 ரன்களில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
அதன்பின் களமிறங்கிய கேப்டன் கிரேக் எர்வின் ரன்கள் ஏதுமின்றியும், மில்டன் ஷும்பா 2 ரன்களுக்கும், சிக்கந்தர் ரஸா 10 ரன்களிலும், ரியான் பார்ல் 9 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களாலும் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் 22.5 ஓவர்களிலேயே ஜிம்பாப்வே அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய வநிந்து ஹசரங்கா 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.