
ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருக்கும் வீரர்கள். ஊழியர்களுக்கு அடுத்தடுத்து கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் வீரர்கள், நடுவர்கள், வர்ணனையாளர்கள் என பலரும் தொடரை விட்டு விலகி சொந்த நாட்டை நோக்கி படை எடுத்துள்ளனர்.
ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் ஸ்லாட்டர் ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக இருந்து வந்தார். தொடர்ந்து அதிகரித்து வந்த கரோனா அச்சுறுத்தலால் அவர் திடீரென பபுளில் இருந்து வெளியேறினார். ஆனால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு செல்லவில்லை. மாறாக மாலத்தீவுக்கு சென்றுள்ளார். இதற்கு காரணம் ஆஸ்திரேலியா நாட்டிற்கு செல்ல அனுமதி கிடைக்காததே ஆகும்.
இந்தியாவில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பால், இந்தியாவில் இருந்து வரும் அனைத்து பயணிகள் விமானங்களுக்கும் மே 15ஆம் தேதி வரை ஆஸ்திரேலிய அரசு தடை விதித்துள்ளது. இதுகுறித்து அறிவித்த அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன், ஆஸ்திரேலியராக இருந்தாலும் 15ஆம் தேதி வரை நாட்டுக்குள் வரக்கூடாது. கிரிக்கெட் வீரர்களுக்கும் இது பொருந்தும் என அறிவித்தார். மேலும் ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருக்கும் வீரர்களுக்கு தனி விமானமும் ஏற்பாடு செய்ய முடியாது என அறிவித்துள்ளார்.