
ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இலங்கை கிரிக்கெட் அணி படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 9 போட்டிகளில் வெறும் 2 வெற்றிகளையும் 7 தோல்விகளையும் பதிவு செய்து லீக் சுற்றுடன் வெளியேறியது. 1992 உலகக் கோப்பையை அர்ஜுனா ரணதுங்கா தலைமையில் வென்ற இலங்கை முரளிதரன், மலிங்கா, சங்ககாரா போன்ற ஜாம்பவான்களால் உலகத்திற்கே சவாலை கொடுத்து 2014 டி20 உலகக் கோப்பையையும் வென்றது.
ஆனால் அவர்கள் ஓய்வுக்கு பின் தரமான அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாமல் திணறும் இலங்கை 2022 ஆசிய கோப்பையை வென்றதால் மறுமலர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் கடந்த ஜனவரியில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்தியாவிடம் 317 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று தோல்வியை சந்தித்த இலங்கை அணி, 2023 ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் சொந்த மண்ணில் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 50 ரன்களுக்கு சுருண்டு அவமான தோல்வியை சந்தித்தது.
இந்நிலைமையில் சனாக்கா, ஹஸரங்கா போன்ற சில முக்கிய வீரர்கள் காயமடைந்து வெளியேறியதால் பின்னடைவுடன் 2023 உலகக் கோப்பையில் விளையாடிய அந்த அணி மீண்டும் இந்தியாவுக்கு எதிராக வெறும் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி கொஞ்சம் கூட முன்னேறாமல் படுதோல்வியை சந்தித்தது. மேலும் இந்த அடுத்தடுத்த தோல்விகளால் ஏமாற்றமடைந்த இலங்கை விளையாட்டு துறை தங்களுடைய வாரியத்தை கலைப்பதாக அதிரடியான உத்தரவிட்டது.