
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியானது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரை இலங்கை மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது நடைபெற்றது. இதில் முதல் டி20 போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.
இதையடுத்து தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் விஷ்மி குணரத்னே 2 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த கேப்டன் அத்தபத்து - ஹர்ஷிதா மாதவி ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் அதிரடியாக விளையாடிய அத்தபத்து 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 38 ரன்களிலும், மாதவி 28 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழக்க, அடுத்து களமிறங்கிய கவிஷா தில்ஹாரியும் 26 ரன்களில் பெவிலியன் திரும்பினர். அதன்பின் களமிறங்கிய ஹாசினி பெரேரா 2, நிலாக்ஷி டி சில்வா 12, அமா காஞ்சனா 19 ரன்களை எடுக்க, இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களை மட்டுமே சேர்த்தது.