SMAT 2023: ரிங்கு சிங் அதிரடி வீண்; உத்திர பிதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது பஞ்சாப்!
உத்திர பிரதேச அணிக்கெதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்தியாவின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற முதலாவது காலிறுதிச்சுற்றில் உத்திர பிரதேஷம் - பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய உத்திர பிரதேஷ அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் கரண் சர்மா 14 ரன்களிலும், அபிஷேக் கோஸ்வாமி 16 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, அடுத்து களமிறங்கிய அதிரடி வீரர் நிதிஷ் ராணாவும் 17 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதையடுத்து ஜோடி சேர்ந்த சமீர் ரிஸ்வி - ரிங்கு சிங் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர்.
Trending
இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிங்கு சிங் அரைசதம் கடந்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 4 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 77 ரன்களையும், அவருக்கு துணையாக விளையாடிய சமீர் ரிஸ்வி ஒரு பவுண்டரி, 4 சிக்சர்கள் என 42 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் உத்திர பிரதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கும் எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. தொடக்க வீரர் பிரப்சிம்ரான் சிங் முதல் பந்திலேயே ஆட்டமிழக்க, அபிஷேக் சர்மா 12, கேப்டன் மந்தீப் சிங் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த அன்மொல்ப்ரீத் சிங் - நெஹல் வதேரா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் நெஹல் வதேரா அரைசதம் கடந்த கையோடு 52 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அன்மொல்ப்ரீத் சிங் 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய சன்வீர் சிங் 35 ரன்களையும், ரமந்தீப் சிங் 22 ரன்களையும் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இதன்மூலம் பஞ்சாப் அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் உத்திர பிரதேச அணியை வீழ்த்தி நடப்பு சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now