
சையத் முஷ்டாக் அலி கோப்பை உள்ளூர் டி20 தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற குரூப் ஈ பிரிவுக்கான லீக் ஆட்டத்தில் ஆந்திரா மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹைதராபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆந்திரா அணிக்கு ஸ்ரீகர் பரத் மற்றும் அஸ்வின் ஹெப்பர் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் முதல் ஓவரில் இருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இருவரும் அபாரமாக விளையாடியதுடன் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து, முதல் விக்கெட்டிற்கு 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
பின் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 52 ரன்களைச் சேர்த்த நிலையில் அஸ்வின் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த கேப்டன் ரிக்கி புயும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் அரைசதம் கடந்து அசத்தினார். பின் 7 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 68 ரன்கள் எடுத்த கையோடு ரிக்கி புயும், சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரீகர் பரத் 8 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 93 ரன்களிலும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர்.