
ஆஸ்திரேலியா அணி தற்சமயம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதனையடுத்து இலங்கை - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை (பிப்ரவரி 12) கொழும்புவில் உள்ள ஆர் பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணி ஏற்கெனவே டெஸ்ட் தொடர வென்ற கையோடு இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம் இலங்கை அணியும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
மேற்கொண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன் ஆஸ்திரேலிய அணி பங்கேற்கும் கடைசி ஒருநாள் தொடர் இது என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்கள் பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஜேசில்வுட், மிட்செல் மார்ஷ் மற்றும் மார்கஸ் ஸ்டொய்னிஸ் உள்ளிட்டோர் தொடரில் இருந்து விலகிய நிலையில், ஸ்டீவ் ஸ்மித் அணியின் கேப்டனாக செயல்படவுள்ளார்.