
இந்தியா - அயர்லாந்து மகளிர் அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணிக்கு ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதிகா ராவல் இணை ஆரம்பம் முதலே அதிரடியாக விளைடாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது 10ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், பிரதிகா ராவல் தனது இரண்டாவது சதத்தை விளாசினார். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 233 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் ஸ்மிருதி மந்தனா 135 ரன்களிலும், பிரதிகா ராவல் 154 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய ரிச்சா கோஷும் 59 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 435 ரன்களைக் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் அயர்லாந்து அணி 131 ரன்னில் ஆல் அவுட் ஆனது.