
இந்தியா - இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியானது இன்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை வென்ற இந்திய மகளிர் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இலங்கை அணியை பந்துவீச அழைத்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா சதமடித்து அசத்தினார். மேற்கொண்டு இப்போட்டியில் ஸ்மிருதி மந்தனா 116 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, ஹர்லீன் தியோல் 47 ரன்களிலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 44 ரன்களையும், ஹர்மன்ப்ரீத் கவுர் 41 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்ததுடன் அரைசதம் அடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டனர். இதன் காரணமாக இந்திய மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 342 ரன்களைச் சேர்த்தது.
இலங்கை அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மல்கி மதரா, தெவமி விஹங்கா, சுகந்திகா குமாரி உள்ளிட்டோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனைத்தொடர்ந்து இலங்கை மகளிர் அணி இமாலய இலக்கை நோக்கி விளையாடவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிய்ல் இந்திய அணியின் துணைக்கேப்டன் ஸ்மிருதி மந்தனா சதமடித்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளையும் படைத்துள்ளார்.