
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டவது ஒருநாள் போட்டி வதோதராவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா- பிரதிகா ராவல் இணை களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் கடந்ததுடன், முதல் விக்கெட்டுக்கு 110 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
அதன்பின் ஸ்மிருதி மந்தனா 53 ரன்னிலும், பிரதிகா ராவல் 76 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஹர்லீன் தியோல் சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவுசெய்ததுடன் 115 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 52 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் எடுத்தது. இதையடுத்து விண்டீஸ் அணி இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.
இந்நிலையில் இப்போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அரைசதம் கடந்து அசத்தியதன் மூலம் வரலாற்று சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். அதன்படி 2024ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் ஸ்மிருதி அடிக்கும் 16ஆவது 50+ ஸ்கோர் இதுவாகும். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு வருடத்தில் 16 அல்லது அதற்கு மேற்பட்ட 50+ ஸ்கோர்களை எடுத்த உலகின் முதல் கிரிக்கெட் வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார்.