
Womens T20I Rankings: ஐசிசி மகளிர் டி20 வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மூன்றாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது தற்சமயம் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தியதுடன் 1-0 என்ற கணக்கில் டி20 தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
இப்போட்டியில் சதமடித்து அசத்திய இந்திய மகளிர் அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆட்டநாயகி விருதை வென்றார். இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீராங்கனைகளும் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மகளிர் டி20 வீராங்கனைகளுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.