
இந்திய மகளிர் அணி அடுத்ததாக அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை (ஜனவரி 10) ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் வெற்றிகளுக்கு பிறகு இந்திய மகளிர் அணி இத்தொடரை எதிர்கொள்கிறது.
மேலும் இந்த அணியில் வழக்கமான கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக ஸ்மிருதி மந்தனா அணியை தலைமை தாங்குகிறார். இதனால் அவரது தலைமையில் இந்திய அணி எவ்வாறு செயல்படும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்நிலையில் இப்போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 40 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில், சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 4000 ரன்கள் என்ற மைல்கல்லை பூர்த்தி செய்வார்.
இதுவரை இந்திய அணிக்காக ஸ்மிருதி மந்தனா 94 ஒருநாள் போட்டிகளில் 94 இன்னிங்ஸ்களில் விளையாடி 3960 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அவர், 9 சதங்கள் மற்றும் 29 அரைசதங்களை பதிவுசெய்துள்ளார். இதுதவிர்த்து இந்த மைல் கல்லை எட்டும் பட்சத்தில் இந்திய அணிக்காக இந்த சாதனையை படைக்கும் இரண்டாவது வீராங்கனை எனும் பெருமையையும் ஸ்மிருதி மந்தனா படைக்கவுள்ளார்.