
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரை பிசிசிஐ நடத்துகிறது. இந்நிலையில் நாளை நடைபெறும் 10ஆவது லீக் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலன இந்திய அணியை எதிர்த்து, லாரா வோல்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ஏ.சி.ஏ கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதில் இந்திய அணி ஏற்கெனவ அடுத்தடுத்து போட்டிகளில் வெற்றி பெற்ற உத்வேகத்துடன், தென் ஆப்பிரிக்க அணி கடைசி போட்டியில் வெற்றி பெற்றதுடனும் இப்போட்டியில் விளையாடவுள்ளன. இத்னால் இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், இப்போட்டியின் மூலம் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அதனப்டி, ஸ்மிருதி மந்தனா 2025 ஆம் ஆண்டில் 16 இன்னிங்ஸ்களில் 959 ரன்கள் எடுத்துள்ளார். இந்நிலையில் அவர் மேலும் 41 ரன்கள் எடுத்தால், ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் ஒரு வருடத்தில் 1,000 ரன்கள் எடுத்த முதல் வீராங்கனை என்ற பெருமையைப் பெறுவார்.