
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஆண்டின் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அந்தவகையில் 2024 ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை தேர்வு செய்யும் பணிகளில் ஐசிசி இறங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக 2024 ஆண்டில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர் மற்றும் வீராங்கனை விருதுகான அறிவிப்பை ஐசிசி இன்று அறிவித்து. இதில் 2024 ஆம் ஆண்டிற்கான ஐசிசி ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் வீரராக ஆஃப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் அஸ்மத்துல்லா ஒமர்சாய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் இந்த விருதை வென்ற முதல் ஆஃப்கானிஸ்தான் வீரர் எனும் பெருமையையும் ஒமர்ஸாய் பெற்றுள்ளார்.
முன்னதாக இந்த விருதுகான பரிந்துரைப் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸின் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், இலங்கை அணியின் குசால் மெண்டிஸ், வநிந்து ஹசரங்கா ஆகியோருடன் ஆஃப்கானிஸ்தானின் அஸ்மதுல்லா ஒமர்ஸாயின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் ஓட்டுகளின் அடிப்படையில் ஐசிசி 2024ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரர் விருதை அஸ்மதுல்லா ஒமர்ஸாய் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.