
டிஎன்பிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியை பதிவுசெய்தது. இந்த போட்டியில் நெல்லை அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சோனு யாதவ் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
அதன்படி இன்னிங்ஸின் கடைசி ஓவரை சோனு யாதவ் வீசிய நிலையில், அந்த ஓவரின் மூன்றாவது பந்தை எதிர்கொண்ட முகிலேஷ் பெரிய ஷாட்டை விளையாட முயற்சித்தார். ஆனால் பந்து அவர் எதிர்பார்த்ததை விட ஸ்லோவராக இருந்ததன் காரணமாக முகிலேஷ் பந்தை முழுமையாக தவறவிட்டு க்ளீன் போல்டாகினார். அதன்பின் களமிறங்கிய சரவண குமாரும் டீப் கவர் திசையை நோக்கி பவுண்டரி அடிக்க முயற்சித்து அருண் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து ஓவரின் 5ஆவது பந்தை எதிர்கொண்ட கௌஷிக்கும் டீப் மிட் விக்கெட் திசையில் பவுண்டரி அடிக்க முயற்சித்து தூக்கி அடிக்க அத்திசையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த ஹரிஷ் கேட்ச் பிடித்தார். இதன் மூலம் சோனு யாதவ் தனது ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியதுடன் சில சாதனைகளையும் படைத்துள்ளார். அந்தவகையில் நடப்பு டிஎன்பிஎல் தொடரில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.