என்னை கவர்ந்த 3 வீரர்கள் இவங்கதான்: கங்குலி
நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் தனது கவனத்தை ஈர்த்த 3 இளம் வீரர்கள் குறித்து பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி பேசியுள்ளார்.

ஐபிஎல் 15ஆவது சீசன் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசன் மூலம் பல இளம் வீரர்களின் திறமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.உம்ரான் மாலிக், யாஷ் தயால், மோக்சின் கான், முகேஷ் சௌத்ரி, குல்தீப் சன், சமர்ஜித் ஆகியோர் தொடர்ந்து வேகப்பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு, பலரது கவனத்தை ஈர்த்துள்ளனர்.
இவர்களில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சேர்ந்த உம்ரான் மாலிக்தான் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளார். டெல்லி அணிக்கு எதிராக ரௌமேன் பௌலுருக்கு இவர் வீசிய 157 கி.மீ வேகம் கொண்ட பந்துதான், இந்த சீசனில் அதிவேக பந்தாகும். அடுத்து 155 கி.மீ வேகத்தில் பந்துவீசி, இவர்தான் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். தொடர்ந்து அபாரமாக செயல்பட்டு வருவதால், இவருக்கு விரைவில் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் முகேஷ் சௌத்ரி, குல்தீப் சன், சமர்ஜித் சிங் போன்றவர்களும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதும், இந்திய கிரிக்கெட்டிற்கு நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த சீசனில் உங்களை கவர்ந்த இளம் வீரர் யார் என பத்திரிகையாளர் ஒருவர், பிசிசிஐ தலைவர் கங்குலியிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த கங்குலி, ‘‘முதலில் உம்ரான் மாலிக். எத்தனை பேரால் தொடர்ந்து 150 கி.மீ வேகத்தில் பந்துவீசிவிட முடியும்? உம்ரான் மாலிக் விரைவில் இந்த அணிக்காக விளையாடினாலும், ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
இருப்பினும், உம்ரான் மாலிக்கை பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும். அதிவேகமாக பந்துவீசினாலும், இன்னமும் அவர் தன்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பௌலர் குல்தீப் சன்னும் தொடர்ந்து அபாரமாக பந்துவீசுகிறார். மீண்டும் கம்பேக் கொடுத்த நடராஜனும் அபாரமாகத்தான் செயல்பட்டு வருகிறார்’’ எனத் தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now